லோக்பால் அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று மீண்டும் உணவு புறக்கணிப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
பிரபல சமூக ஆர்வலர் அன்னாஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு டெல்லியில் நடத்திய காலவரையற்ற உணவுப் புறக்கணிப்புப் போராட்டம் நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
ஊழலை ஒழிப்பதற்காக இந்திய மத்திய அரசு லோக்பால் சட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும என்பதையும், மாநிலங்களில் லோக்ஆயுக்தா அமைப்பை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைககளையும் வலியுறுத்தி அவர் அந்த உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
அவரின் அந்த கோரிக்கைகள் தொடர்பில் அப்போதைய மத்திய அரசு உறுதி அளித்ததை அடுத்து அவர் அந்த போராட்டத்தை கைவிட்டார்.
அதன் பின்னர் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அண்மையில் அறிவித்துள்ளது போன்று, லோக்பால் அமைக்க வலியுறுத்தி ராம்லீலா மைதானத்தில் பெரிதாக அமைக்கப்பட்ட பந்தலில் இன்று தனது காலவரையற்ற உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார்.