வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ரகசியமாகச் சீனாவுக்கு பயணம் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிம் ஜோங்குடன் வடகொரியாவின் முக்கிய பிரதிநிதிகளும் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருகை தந்துள்ளதாகவும், இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து தென்கொரிய தரப்பில், எங்களுக்கு உறுதியான தகவல் கிடைக்கவில்லை. எனினும் நாங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை கிம்மின் சீனப் பயணம் உறுதிப்படுத்தப்பட்டால் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிம்மின் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையும்.
தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கூட, வடகொரியா சார்பாக கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்தான் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் கிம்மின் சீனப் பயணம் உறுதிப்படுத்தப்பட்டால் சீனா – வடகொரியா இடையே குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்படும்.
முன்னதாக தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்திவரும் வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன. மேலும் வடகொரியாவின் அணுஆயுத சோதனை நடவடிக்கையை தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சீனா, வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கிறது என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா வைத்தது. ஆனால் சீனா இதனை மறுத்தது.
ஆனால் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு தென் கொரியா- அமெரிக்கா – வடகொரியா சுமுகமான போக்கு நிலவி வருவதாக நம்படும் சூழ்நிலையில் கிம்மின் சீனப் பயணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது உலக அரசியலில் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.