மாகாணமாக இருந்தாலும் உள்ளூர் அரசாக இருந்தாலும் எதற்கும் வரி என்று எதையும் அமேசான் நிறுவனம் கட்டியதில்லை என்று ஆத்திரமடைந்த ட்ரம்ப் அமேசான் நிறுவனத்தை கடுமையாகச் சாடினார்.
இன்னும் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
“அமேசான் பற்றி எனது கவலைகளை நான் தேர்தலுக்கு நீண்ட நாட்கள் முன்பாகவே தெரிவித்துள்ளேன், இந்த நிறுவனம் வரிகளே செலுத்துவதில்லை. நம் நாட்டு தபால் ஊழியர்களை தங்கள் நிறுவன டெலிவரி பையன்களைப் போல் பயன்படுத்திக் கொள்கிறது அமேசான், இதனால் அமெரிக்காவுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது, இவர்களினால் பல சில்லரை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து வர்த்தகத்தை விட்டே சென்றுவிட்டனர்” என்று ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வெள்ளை மாளிகை அமேசான் மீது நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது. “அமேசான் நடத்தை குறித்து அதிபர் தனது கவலைகளை வெளியிட்டுள்ளார், இப்போதைக்கு நடவடிக்கை எதுவும் இல்லை, ஆனால் நடவடிக்கைத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும்.
அதிபர் இன்று காலை அமேசான் மீது தன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார், அவர் தனது கவலைகளைத் தெளிவாகவே வெளிப்படுத்தி விட்டார். அமேசான் பயனாளர்கள் விற்பனை வரி செலுத்துவதில்லை. மேலும் அந்த நிறுவனத்தின் வர்த்தக முறைகளினால் நாட்டின் பல சில்லரை விற்பனையாளர்கள் வர்த்தகத்தை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.” என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் அமேசான் மீது இத்தகைய அதிருப்தியை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்பு செய்தி இணையதளம் ஆக்ஷியோஸ் தனது செய்தியில் அமேசான்களின் வரி கையாளுதலை மாற்ற வேண்டும் என்றும் இதனால் பல சில்லரை விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் வர்த்தகத்தைத் துறந்துள்ளனர், எனவே அமேசான் மீது நம்பிக்கை உடைப்பு அல்லது வர்த்தகப் போட்டி சட்டம் என்று எதையாவது எழுப்ப வேண்டும் என்று சாடியிருந்தது.
மேலும், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெஸாசின் இறகுகளை ட்ரம்ப் முறிக்க வேண்டும் என்றும் ஆக்ஷியோஸ் காட்டமாகத் தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த அதிருப்தியின் பின்னணியில் வேறு ஒரு கதை இருப்பதாகவும் கூறப்படுகிறது, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அமேசானின் ஜெஃப் பெஸாசுடையதுதான், தேர்தல் சமயத்தில் சுமார் 20 நிருபர்கள் ட்ரம்புக்கு எதிரான விஷயங்களைத் திரட்டி எழுத பணிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் அமேசான் மீதான காட்டமான அதிருப்தியினால் பங்குச் சந்தையில் அமேஸான் பங்குகளின் விலை 9% சரிவு கண்டுள்ளது.
இப்போதைக்கு இண்டெர்னெட் விற்பனை வரி இல்லை, இனிமேல்தான் உருவாக்க வேண்டுமென்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
1994-ம் ஆண்டு ஆன் லைன் வர்த்தகத்தில் நுழைந்த பெஸாசின் அமேசான் இப்போது உலக வர்த்தகத்தில் சிறு வணிகங்கள் உட்பட பல்வேறு தொழில்களை விழுங்கும் பிசாசாக அசுர வளர்ச்சிகண்டுள்ளது.