உத்தரப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழத்தில் மாணவர்களின் ஈவ் டீசிங் தொல்லை தாங்க முடியாமல் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) அகிலேஷ் குமார் தெரிவித்ததாவது:
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சார்ந்த கான்பூரில் உள்ளது சிஎஸ்கேஎம் பல்கலைக்கழகம். இங்கு 19 வயது மதிக்கத்தக்க பெண் சிஎஸ்கேஎம் பல்கலைக்கழகத்தில் ‘பேச்சுலர் ஆப் கம்யூட்டர் அப்ளிகேஷன்’ பாடப்பிரிவில் பயின்று வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த மூத்த மாணவர்கள் இருவர் அவரை ஈவ் டீசிங் செய்துள்ளனர்.
மாணவர்களின் ஈவ் டீஸிங்கினால் மனமுடைந்து மாணவி வீடு திரும்பியதும் வீட்டில் உள்ளவர்களிடம் தனது நிலையை கூறியுள்ளார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவர் திடீரென்று அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டார்.
அனிகெட் பாண்டே மற்றும் அனிகெட் தீக்ஷிட் ஆகிய இரண்டு மாணவர்கள்தான் தினமும் ஈவ் டீசிங் செய்து வந்ததாக தன் மகள் தெரிவித்ததாக பெண்ணின் தந்தை கூறினார்.
இவ்வாறு மூத்த காவல் கண்காணிப்பாளர் எஸ்எஸ்பி தெரிவித்தார்.
ஈவ் டீசிங் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது குறைந்து வரும் நிலையில், கல்லூரி படிக்கும் மாணவர்களிடையே நல்ல எண்ணங்களை வளர்க்க ஈவ் டீசிங் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.