முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் நடாத்திய முற்றுகைப் போருக்கு எதிராக, தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய வீரஞ்செறிந்த போர் இன்று உலகத் தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நினைவில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய பல போர்க்களங்கள் நாம் கண்டுள்ள நிலையில், மிக வித்தியாசமானதொரு களமாக ஆனந்தபுரத்தில் நிகழ்தேறியே முற்றுகைபோர் பார்க்கப்படுகிறது.
விடுதலை அல்லது வீரச்சாவு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும், பொறுப்பாளர்களும், தளபதிகளும் அந்தக்களத்தில் வீர காவியம் படைத்தனர்.
பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்து, உண்ண உணவு இன்றி, குடிக்க தண்ணீர் கூட இன்றி, அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில், தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த நிலையில், தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சக்கட்டத்தில் கூட தர்மபோர் நடத்தினார்கள்.
அந்தக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால் அந்த மண்ணில் பதியப்பட்டது.
அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் நாள் அன்று, வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன், அனைத்துவித போர் விதிமுறைகளுக்கும் முரணாக சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 09ம் ஆண்டு வீரவணக்க நாளை உலகத் தமிழினம் கனத்த மனத்துடன் இன்று நினைவுகூர்கின்றனது.
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.