இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிப்பது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையுடன் தீர்மானிக்க வேண்டும் என்று ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறும் எதிராக வாக்களிக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இரு தரப்பும் நாடியுள்ள நிலையில், தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்புக்கு தமிழ் மக்களின் நலன்சார்ந்து சில நிபந்தனைகளை விதித்து அதனை ஏற்றுக்கொள்ளும் தரப்பிற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த அமைப்புக்கள் சார்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று பிற்பகல் ஊடகவியாலாளர்களைச் சந்தித்த பிரதிநிதிகள் இது குறித்த அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.
அதில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நான்காம் நாள் எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட இருக்கின்றது எனவும், இந்தப் பிரேரணை விடயத்தில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கப் போகின்றது என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் மட்டும் இது விடயத்தில் முடிவூகளை எடுக்க வேண்டும் எனவும், தமிழ் மக்களின் அபிலாசைகளில் சிலவற்றையாவது நல்லெண்ண அடிப்படையில் பிரேரணை விவாதத்திற்கு வருவதற்கு முன்னரே நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படுதல் வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் எந்தவித நிபந்தனையூம் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்வதுடன் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை முன்வைத்து நடைமுறைபடுத்த வேண்டும், வட பகுதியை நோக்கிய மகாவலி குடியேற்றத்திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை தமிழ் அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
அத்துடன் மாவட்ட அரச செயலகங்களின் அதிகாரங்கள் மீளவூம் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும், வன பரிபாலன திணைக்களம்இ தொல்பொருள் திணைக்களம் என்பவற்றின் அத்துமீறல்கள் தமிழ் பிரதேசங்களில் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும், படையினரால் பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும், தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்த்தரப்பின் பங்களிப்புடன் மட்டும் பொருளாதார முதலீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும் ஆகிய நிபந்தனைகளும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும், வவுனியா, மன்னார் அரச அதிபர்களாக உடனடியாக தமிழர்கள் நியமிக்கப்படல் வேண்டும், கல்முனை தமிழ்ப் பிரதேச செயலர்பிரிவூ உடனடியாக தரம் உயர்த்தப்பட வேண்டும், சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து இராணுவம் விலக வேண்டும் ஆகிய நபந்தனைளையும் குறித்த அந்த தமிழ் அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.