மாறி மாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கங்களை இனியும் நம்புவதற்கு நாம் தயாராக இல்லை என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 406ஆவது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்த உறவுகள், கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டிருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரே இலங்கை அரசாங்கத்தை நம்ப முடியாது என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய உறவுகள், மாறி மாறி ஆட்சிக்கு இந்த அரசாங்கத்தை தாமும் நம்ப தயாரில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்தை நம்பாத தாம் இந்த அரசால் உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தையோ அதற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பல தரப்பட்ட நிறுவனங்களால் தமது விபரங்கள் திரட்டபடுவதை கண்டிப்பதுடன் அவர்கள் குறித்து ஐ.நா. சபையில் முறையிடப்போவதாகவும் தெரிவித்தனர். மேலும், தமிழர்களின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் விரைந்து பேரவலம் சூழ்ந்திருக்கும் தமிழர்களின் விடிவிற்காக, தீர்க்க தரிசனமான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்கும்படி கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்