‘ரஷ்ய முன்னாள் உளவாளி மற்றும் அவருடைய மகள் மீது ரசாயன விஷவாயு தாக்குதல் நடத்தியது இங்கிலாந்தும் அமெரிக்காவும்தான்’’ என்று ரஷ்ய உளவுப் பிரிவு துறைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்ய உளவுப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் செர்ஜே ஸ்கிரிபால். பின்னர் இவர் ரஷ்ய ராணுவ ரகசியங்களை இங்கிலாந்தின் உளவு அமைப்பான எம்16-க்கு அளித்ததாக ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் உளவாளிகளைத் திரும்ப ஒப்படைத்தல் ஒப்பந்தத்தின்படி ஸ்கிரிபால் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 4-ம் தேதி ஸ்கிரிபால் மற்றும் அவருடைய மகள் யூலியா ஆகியோர் மீது இங்கிலாந்தில் விஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றனர். அவர்கள் மீது ரசாயன விஷ வாயு தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியது. அதை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், ரஷ்ய ராணுவ அமைச்சகம் சார்பில் புதன்கிழமை சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடந்தது. இதில் ரஷ்ய உளவு துறைத் தலைவர் நரிஷ்கின் பேசும்போது, ‘‘செர்ஜே ஸ்கிரிபால், மகள் யூலியாவின் நரம்பு மண்டலங்களைப் பாதிக்கும் வகையில் ரசாயன விஷ வாயு தாக்குதல் நடத்தியது இங்கிலாந்தும் அமெரிக்காவும்தான். ரஷ்யாவின் வளர்ச்சி, பலத்தை சீர்குலைக்க அமெரிக்க எடுத்துவரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று’’ என்று குற்றம் சாட்டினார்