1954 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களை அழிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் தமிழர்களை அழிக்கும் திட்டங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் 413 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் இன்று சந்தித்தார். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்தார். தற்போது அரசு மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது பிள்ளைகளின் விடயத்தில் உரிய தீர்வு கிடைக்க தமிழக சட்டமன்றத்தில் கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து தமக்காக குரல் கொடுக்குமாறு கருணாஸிடம் வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் கருணாஸ் தெரிவித்ததாவது:
இன்று பல குடும்பங்கள் இவ்வாறு தமது பிள்ளைகளை காணாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் நிலையை நான் இன்று நேரில் அவதானித்தேன்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் சட்டமன்ற அமர்வில் முதலமைச்சர் ஊடாக கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை முன்வைக்க உள்ளேன். வெறுமனே இவர்களை பார்த்துவிட்டு செல்வதில் எவ்வித பயனும் இல்லை.அவ்வாறு பிரேரணையை முன்வைத்த பின்னர் ஜனாதிபதிக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொட்பில் தெரிவிக்க உள்ளோம்.
ஜெனிவாவுக்கு இம்முறை செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சட்டமன்ற தீர்மானத்தை எடுத்து அடுத்துவரும் ஜெனிவா அமர்வில் நான் கலந்து கொண்டு, இலங்கை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கட்டாயம் உரையாற்றுவேன் – என்றார்.