சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தெகிவளையில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை எடுத்து வந்தது. சிறிலங்கா பிரதமர் ரணில் அதற்குப் பதிலளித்திருந்தார்” என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 கோரிக்கைகள் அடங்கிய நிபந்தனையை முன்வைத்திருந்தது.
அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.