சௌதி அரேபியாவில் 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தியேட்டரில் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 18ஆம் தேதி திறக்கப்பட உள்ள தியேட்டரில் “ப்ளாக் பேந்தர்” படம் திரையிடப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில், சௌதியில் 15 நகரங்களில், 40 திரையரங்குகள் திறக்க, உலகின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான ஏ எம் சி உடன் இதன் ஒரு பகுதிக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
விஷன் 2030 திட்டத்தின் கீழ் சௌதி அரேபியாவுக்கு பொழுதுப்போக்குத் துறையை கொண்டு வருவதற்கான பெரிய தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.
இது பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வர சௌதி அரசர் மொகமத் பின் சல்மானின் திட்டமாகும்.
1970களில் பழமைவாத முஸ்லிம் ராஜ்ஜியத்தில் திரையரங்குகள் இருந்தன. ஆனால் மதகுருக்களின் கட்டளைகள்படி அவை மூடப்பட்டன.
திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டால், ஒழுக்கம் கெட்டுப் போய்விடும் என, கடந்த ஆண்டு மத அதிகாரியான ஷேக் அப்துல் அசிஸ் அல்- ஷேக் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அதன் கலாசாரத்தில் சௌதி அரேபிய மக்கள் ஆர்வம் காட்டினாலும், அதனை தனியாக தங்கள் அலைபேசிகளிலோ அல்லது வீட்டு தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்கின்றனர்.
2030ஆம் ஆண்டில் 350 தியேட்டர்கள் மூலம், ஆண்டுக்கான டிக்கெட் விற்பனையில் ஒரு பில்லியன் டாலர்கள் வரை ஈட்ட முடியும் என சௌதி அதிகாரிகள் மற்றும் சினிமா திரையடுபவர்கள் நம்புகின்றனர்.
கிங் அப்துல்லா வணிக மாவட்டத்தில் முதல் திரையரங்கு திறக்கப்படும். சமபத்தில் வெளியான சூப்பர் ஹிட் ஹாலிவுட் திரைப்படம் ப்ளாக் பேந்தர் படம் திரையிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், எந்த மாதிரியான திரைப்படங்கள் அங்கு வெளியாகும் என்று தெரியவில்லை. சில படங்கள் தணிக்கை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
விஷன் 2030ன் நோக்கம் என்ன?
சௌதி அரேபியாவின் பொருளாதாரமானது எண்ணை வளங்களை மட்டுமே நம்பி இருக்காமல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களின் பணத்தை வெளிநாடுகளில் செலவு செய்யாமல், தங்கள் சொந்த நாட்டிலேயே செலவு செய்ய மற்ற விஷயங்கள் தேவை என்ற நோக்கத்துடனானதுதான் விஷன் 2030.
இத்திட்டத்தை சௌதி அரசர் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். பெருமளவு எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி இருக்கும் ராஜ்ஜியத்தில் உள்ள மக்களை கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் செலவு செய்ய வைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் குறிக்கோள்.