சிறீலங்காவின் எஸ்.ரி.எப் என்றழைக்கப்படும் சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளது.
ITJP என்ற இலங்கையின் நீதிக்கும் நியாயத்திற்குமான அனைத்துலக அமைப்பு இந்த பட்டியலை வழங்கியுள்ளதுடன், அந்த அமைப்பு நேற்றையநாள் லண்டனில் வைத்து வெளியிட்ட அறிக்கையொன்றில் வெள்ளைவான் கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது போர் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை தயாரிக்கும் குழுவான தாருஸ்மன் குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்துலக சட்டவல்லுநரான யஸ்மின் சூகா தலைமையிலான இலங்கையின் நீதிக்கும் நியாயத்திற்குமான அனைத்துலக அமைப்பு, நேற்றையநாள் லண்டன் நகரிலுள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடத்திய ஊடகவியாளர் சந்திப்பில் இந்த புதிய அறிக்கையை வெளியிட்டு வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் இணைத்துக்கொள்ளாது தடை செய்யப்பட வேண்டியவர்கள் என்று சிறீலங்காவின் சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய இரகசிய பட்டியலொன்றையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளதாக நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றிய சிங்கள அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த தமிழர்கள் ஆகியோர் வழங்கிய ரகசிய வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, “சிறீலங்காவில் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர்” என்ற இந்த புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ITJP தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை தயாரிப்பதற்காக தகவல்களை திரட்டும் போது தெரியவந்த குற்றமிழைத்தவர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்கான அலுவலகத்திடமும், ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திடமும் கையளித்துள்ளதாகவும் ITJP தகவல் வெளியிட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் அமைதி காக்கும் படையணிக்காக சிறீலங்கா படை அதிகாரிகளையும் படையினரையும் தெரிவுசெய்யும் போது, அவர்களின் பின்புலம் குறித்து ஆராயும் முன்கூட்டிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் ITJP குற்றம்சாட்டியுள்ளது.