உயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணித்து அவமதித்திருப்பதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உயர்கல்வி கற்கும் இளம் கல்வியாளர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது வழங்குவதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. தமிழைவிட தகுதி குறைந்த மொழிகளில் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படும் போது, உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி பயிலும் இளம் கல்வியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் மொழி அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இரு வகையான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளைச் சேர்ந்த 9 பேர் உள்ளிட்ட மொத்தம் 36 பேருக்கு தலா ரூ.5 லட்சம் விருதுத் தொகையுடன் குடியரசுத் தலைவர் விருதுகளும், இந்திய இளம் அறிஞர்கள் 29 பேருக்கு தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையுடன் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்கப்பட உள்ளது.
1958 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம், அரபி, பாரசீக மொழி ஆகிய 3 மொழி அறிஞர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டில் பாலி/பிராகிருத மொழிக்கு இந்த விருதுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு முதல் ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மேலும் 4 மொழிகளுக்கு இந்த விருதுகள் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.
செம்மொழி தகுதி பெற்ற மொழிகள் என்ற அடிப்படையில் தான் மேற்கண்ட மொழிகளில் புலமை பெற்ற அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. செம்மொழி தகுதி பெற்றுள்ள மற்ற அனைத்து மொழிகளையும் விட தமிழ் தான் மூத்த மொழியாகும். அதிலும் குறிப்பாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழிகளின் தாய் தமிழ் என்று போற்றப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது அந்த மொழிகளில் விருது வழங்கிவிட்டு, தமிழ் மொழி அறிஞர்களுக்கு மட்டும் குடியரசுத் தலைவர் விருதும், மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதும் வழங்க மறுப்பது தமிழையும், அதன் சிறப்புகளையும் அவமதிக்கும் செயல். இதன்மூலம் 10 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு காயப்படுத்தியுள்ளது.
உண்மையில் சமஸ்கிருத மொழி எந்த வகையிலும் தமிழை விட சிறந்த மொழி அல்ல. சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி மிகவும் பழமையானது ஆகும். சமஸ்கிருத மொழியைப் பேசும் மக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டாது எனும் நிலையில், தமிழ் மொழியை அதைவிட 50 ஆயிரம் மடங்கு அதிகமாக 10 கோடிக்கும் மேற்பட்டோர் தாய்மொழியாகக் கொண்டு பேசி வருகின்றனர். அதுமட்டுமின்றி, சமஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருக்கிறதே தவிர, வழக்க மொழியாக இல்லை. இத்தகைய தன்மை கொண்ட சமஸ்கிருத மொழி அறிஞர்களுக்கு 1958 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்ட போதே தமிழுக்கும் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போதே தமிழுக்கு விருது வழங்காமல் சமஸ்கிருதத்திற்கு விருது வழங்கியதன் மூலம் மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு இழைத்தது. அப்போது தமிழுக்கு செம்மொழி தகுதி இல்லை என்பதைக் காரணம் காட்டி அரசு நியாயப்படுத்தியது.
ஆனால், இப்போது தமிழுக்குப் பிறகு செம்மொழித் தகுதி பெற்ற திராவிட மொழிகளில் விருதுகளை வழங்கும் மத்திய அரசு, தமிழுக்கு மட்டும் விருது வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? இது திட்டமிட்டு இழைக்கப்படும் சதி தானே? நீட் தேர்வு, காவிரி விவகாரம், வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகத்திற்கு துரோகம் செய்து வரும் மத்திய அரசு, தமிழ் மொழியில் இளம் அறிஞர்களுக்கு விருது வழங்குவதிலும் பெருந்துரோகம் செய்வதை வைத்துப் பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழர்களையும் எதிரிகளாகப் பார்க்கிறது என்று தானே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
தமிழ் மொழி அறிஞர்களுக்கு விருது வழங்கும் விஷயத்தில் மத்திய அரசு செய்த துரோகத்தை விட, தமிழக அரசு செய்த துரோகம் மிகப்பெரியதாகும். மொழி அறிஞர் விருதுக்கு விண்ணப்பிக்கக் கோரும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சுற்றறிக்கை தமிழக அரசின் உயர்கல்வித் துறை மூலமாகத் தான் தமிழகத்திலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏப்ரல் 11 ஆம் தேதியிட்ட மத்திய அரசின் சுற்றறிக்கை தமிழக உயர்கல்வித்துறைக்கு கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கிடைத்தது. தமிழை வளர்ப்பதில் தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் அப்போதே இந்தப் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விருது வழங்கப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்தும் அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை.
மொழி அறிஞர் விருதுகளைப் பொறுத்தவரை தமிழைத் தவிர்த்து விட்டு வேறு எந்த மொழியிலும் விருது வழங்க முடியாது. தமிழ் மொழி அறிஞர்களுக்குத் தான் முதலில் விருது வழங்கப்பட வேண்டும். எனவே, குடியரசுத் தலைவர் மற்றும் மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்கப்படும் மொழிகள் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும். இந்த விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடியும் நிலையில் தமிழ் மொழி விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசத்துடன் கூடிய புதிய அட்டவணையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.