ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், காபூலில் இன்று (திங்கட்கிழமை) ஷாஷ்டராக் பகுதியில் முதலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து என் டி எஸ் புலனாய்வு கட்டிடத்துக்கு வெளியே மற்றுமொரு கூண்டுவெடிப்பு ஏற்பட்டது.
இந்த அடுத்தடுத்து குண்டுவெடிப்பில் புகைப்படக் கலைஞர் ஷா மரை உட்பட 21 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில், கடந்த வாரம் தற்கொலைப் படையைச் சேர்ந்த மர்ம நபர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 57 பேர் பலியாகினர். 119 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.