ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிப்பது ஆபத்தான முன்னுதாரணமாகி விடும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இவர்கள் 7 பேரும் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விட்டதால் விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்ததுள்ள நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது.
இதனால் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் நீதிமன்றில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விளக்கமளிக்க மத்திய உள்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் குறித்த 7 பேரின் விடுதலை தொடர்பில் இந்திய உள்துறை சார்பில் குடியரசுத் தலைவரிடம் விளக்கம் கோரிய நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த மறுத்துள்ளார்.
தமது அந்த மறுப்புத் தொடர்பில் குடியரசுத் தலைவர் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ள விளக்கத்தில், ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட வெளி நாட்டினர் 4 பேர் மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த இந்தியர்கள் 3 பேர் என்று 7 பேரையும் விடுவிப்பது என்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும் என்றும், இது, அனைத்துலக அளவிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளர்ர்.
நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்து ஈடு இணையற்ற தவறுகளை செய்திருக்கிறார்கள் என்றும், சரித்திர குற்றவியல் குற்றத்தை இந்த நாட்டில் அவர்கள் செய்திருக்கிறார்கள், அவர்களுடைய செயல்பாடுகள் மிகவும் ஒழுக்கக் கேடானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு மிகவும் திட்டமிட்டு ஒருங்கிணைத்து கொடூரமான இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில், 9 போலீஸ் அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சனநாயகத்தையே சீர்குலைத்து முடக்கி உள்ளனர் என்றும், இந்த கொலையாளிகளுக்கு விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது என்றும், பெண் மனித வெடிகுண்டை பயன்படுத்தி கொடூர சதித்திட்டத்தின் மூலம் ஏராளமானோருடைய உயிரை பறித்து இருக்கிறார்கள் என்பதால் இந்த தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 3 பேர் கொண்ட அமர்வு இதில் உள்ள சதி திட்டங்களை உறுதி செய்து அவர்கள் மோசமான குற்றம் செய்ததை சுட்டிக்காட்டி அரிதிலும் அரிதான வழக்கு என்று கூறி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மூலம் இந்த கொலை திட்டம் நிறைவேற்றப்பட்டு இந்திய சனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றும், எனவே, அவர்களை விடுவிக்க முடியாது என்றும் ராம் நாத் கோவித் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள விளக்கத்தில் கூறியுள்ளார்.