வலிகாமம் வடக்கில் விமான நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளை தவிர 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதி இன்னமும் சிறிலங்கா இராணுவத்தினர் வசமுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பகுதியானது உயர் பாதுகாப்பு வலையமாக இருந்துவந்த நிலையில், தற்போது 3 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டதுள்ளது எனவும், ஏஞ்சிய 3 ஆயிரம் ஏக்கர் காணியில் குறிப்பிட்டளவு பலாலி விமான நிலைத்திற்கும் , காங்கேசன் துறை துறைமுகத்திற்குமான நிலப்பகுதிகளாக உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலங்களை விட 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது எனவும், வலிகாம் வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாதுள்ளன எனவும், குறிப்பாக மயிலிட்டித்துறை வடக்கு, பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு ஆகிய கிராம சேவையாளர்கள் பிரிவுகளே முழுமையாக விடுவிக்கப்படாதுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 18 கிராம அலுவலர் பிரிவுகள் பகுதி அளவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளன எனவும், காங்கேசன் துறையில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 515 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் விடுவிக்கப்படுமேயானால் காங்கேசன் துறை நகர் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுவிக்கப்படுமானால் மக்கள் மீள் குடியேற்றப்பட்டு நிலைபேறான அபிவிருத்தியை காங்கேசன் துறை நகர் அடைந்து விடுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.