இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறை செயலாக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டிற்கு சமாந்தரமாக இடம்பெற்ற உபக்குழு கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய ஆலோசகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதையும், மனித உரிமைகள் நிலைமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த விடயங்களை ஆராய்ந்து முன்வைத்த அறிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளிப்படையான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிமன்ற உருவாக்கத்துக்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதுடன், சிறிலங்கா இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க இடமளிக்கப் போவதில்லை என்பதையும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தவிடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னேற்றகரமாக இல்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய ஆலோசகர் தெரிவித்துள்ளார்.





