இழுபறி காரணமாக மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படாமல் இலங்கை நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் நேற்றைய கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
நேற்று இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் எந்த தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதில் கட்சித் தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
இதனால் எதிர்வரும் யூலை 6ஆம் நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்தி, புதிய தேர்தல் முறையின் கீழா அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழா தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்பட வேண்டும் என்பதே இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்து என்று இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு வெளியிட்டதுடன், சிறுபான்மைக் கட்சிகளால் இதற்கு இணங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் பழைய தேர்தல்முறைப்படியே மாகாணசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.