சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவே 2015 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் நாள் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர் எனவும், இந்த நிலையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை அமைக்க இடமளிக்க முடியாது என்றும் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருணாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துளள இவர், முன்னைய அந்த அனுபவத்தை மறந்து போனவர்கள் நாட்டில் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை கோருகின்றனர் எனவும், எனினும் 2015 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் நாள் நாட்டு மக்கள் முன்வைத்த எதிர்பார்ப்பை சீர்குலைக்க இடமளிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை வலுவற்ற அரசாங்கம் என்று சிலர் கூறுகின்ற போதிலும், இது சுதந்திரம் மற்றும் சனநாயகத்துடன் செல்லும் பயணம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், கிடைத்துள்ள சுதந்திரம் மற்றும் சனநாயகத்தை சிலர் தவறாக பயன்படுத்தி அரசாங்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டின் கல்வி கற்றவர்கள், புத்திசாலிகள், சனநாயகத்தை மதிக்கும் சகலரையும் இணைத்துக் கொண்டு நாட்டுக்கு தேவையான சரியான அரசியல் மற்றும் அபிவிருத்தி பயணத்தை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரம் மற்றும் சனநாயகம் காரணமாக இலங்கையை விட்டு தூர விலகியிருந்த அனைத்துலகத்தை நாட்டுக்கு நெருக்கமானதாக மாற்ற முடிந்துள்ளதாகவும், இலங்கை பெற்றுள்ள வெற்றியை மீண்டும் திசை திருப்ப எவருக்கும் பங்களிப்பு வழங்கக் கூடாது எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.