அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும் எனவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்குமாறு இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முழுக்க, முழுக்க வடக்கு, கிழக்கில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு, நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இதனைத் தான் சொல்கிறேன் என்பதை சம்பந்தன் புரிந்துக்கொள்வார் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர், அரசாங்கத்தில் இணைந்து, அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும் ஒருசேர முன்னெடுப்பதற்கு தனது தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சுத்தான் தேவை என்றால், அதையும் கொடுத்து விட தான் தயாராக இருப்பதாகவும், சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருப்பதை விட, அமைச்சு பதவியில் இருந்து அதிகம் பணி செய்யலாம் என்று எண்ணுவதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதியமைச்சர் ஹலி ஷாகிர் மௌலானா உட்பட அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணைந்து தமது மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை ஆற்றுகிறார்கள் எனவும், இதேபோல் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய தேவைகளை நிறைவேற்றுமாறு நல்லெண்ண நோக்கில் அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி உண்மையில் நாடாளுமன்ற விதிமுறைகளின் கீழேயே கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், எனினும் சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அதிக எண்ணிக்கை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணியில்தான் உள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை சபையில் அதிக எண்ணிக்கை கொண்ட குழுவுக்கு வழங்கி விட்டு, தமிழ் மக்களுக்கு இன்று தேவையான அபிவிருத்தியை பெற்றுத்தர அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறும் இரா சம்பந்தனுக்கு மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.