நீதிமன்றினால் குற்றச் செயல் நிரூபிக்கப்பட்டு கடூழியச் சிறைத்தண்டன விதிக்கப்பட்ட ஞானசார தேரர், ஓரிரு நாட்களினுள்ளேயே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 6 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை இன்று வழங்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரரால் சம்ர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீடு இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவருக்கு 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில், பிணை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தியா எக்னலிகொட அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் கடந்த 14ஆம் நாள் ஞானசார தேரருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதனை அடுத்து பெளத்த பிக்குகளும், சிங்கள பெளத்த அமைப்புகளும் அவரை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தன.
மகிந்த தரப்பு அரசியல்வாதிகள் மட்டுமின்றி, ஆளும் தரப்பு அரசியல் வாதிகள் சிலரும் அவரது விடுதலையை வலியுறுத்தியதுடன், வெள்ளிக்கிழமைக்குள் அவர் விடுவிக்கப்படுவார் என்று அரசாங்க அமைச்சர் ஒருவரும் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், ஞானசார தேரர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.