தமது இதுவரை கால வரலாற்றில், நேற்றைய தேடுதல் நடவடி்ககையின் போதுதான் பெருமளவு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறை தெரிவித்துள்ளது.
“ஃபைவ் பொயின்ட் ஜெனரல்ஸ்”(Five Point Generalz) எனப்படும் குழுவினை இலக்குவைத்து கடந்த ஒன்பது மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக நேற்று இந்த அதிரடி சுற்றிவழைப்பு சோதனைகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது 78 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றுள் 60 துப்பாக்கிகள் ஒருவரிடம் இருந்து மாத்திரம் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரொரன்ரோ நகர் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகம் முழுவதிலும் நேற்று காலையில் மேற்கொள்ளப்பட்ட 53 சுற்றிவழைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை குறித்த இன்று வெள்ளிக்கிழமை மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ள ரொரன்ரோ காவல்துறையினர், முக்கிய சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து புத்தம் புதிய கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், ஃபுளோரிடாவில் தனிப்பட்ட நபர்களால் கொள்வனவு செய்யப்பட்டு கனடாவினுள் கடத்தி வரப்பட்ட நிலையில், அவற்றை குறித்த இந்த நபர் பெற்று சேமித்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த துப்பாக்கிகள் அனைத்தும் ரொரன்ரோ வீதிகளில் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படுவதற்காக எடுத்துவரப்பட்டவை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிகளை தற்போதய சந்தைப் பெறுமதிக்கு ரொரன்ரோவில் விற்றால், குறைந்தது இரண்டு இலட்சம் டொலர்களை இலாபமாக பெற முடியும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்று கைப்பற்றப்பட்ட 78 துப்பாக்கிகளுக்கும் மேலதிகமாக, துப்பாக்கிகளைத் தயாரிக்கப்ப பயன்படும் உபகரணங்களையும், துப்பாக்கித் தயாரிப்புக்கு போதுமான உதிரிப்பாகங்களையும், ரவைகளையும், கு்ண்டு துளைக்காத அங்கிகளையும், மின் அதிர்வு கருவிகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்கள் விபரம் வெளியிட்டுள்ளனர்.