கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியை சுற்றி வளைத்த காவற்துறையினரும், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும், அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளையும் ஆயுதங்களையும் தேடி அலைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தேடுதலும் விசாரணைகளும் தாயக நேரம் இன்று அதிகாலைவரை தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கைதாகி இருந்த நிலையில் இருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டதுடன், பின்னர் தப்பித்து சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும் மற்றயவரை காவற்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தேடி வந்த நிலையில் இன்று தாயக நேரம் இரவு பத்து மணியளவில் பிரதான சந்தேக நபராக தெரிவிக்கப்படும் கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதா கூறப்படுகிறது.
இதனையடுத்து கிளிநொச்சி சாந்தபுரம் பகுதிக்கு காவற்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைத்து செல்லப்பட்ட அவர், அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கு உள்ள பகுதிகளில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதலும் நடைபெற்று வருகிறது.
குறித்த பகுதிக்கு இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், இதுவரை எவ்வித ஆயுதங்களோ வெடிபொருட்களோ மீட்க்கப்படாத நிலையில் இன்று அதிகாலை 1.30 வரை அவரின் வாக்கு மூலங்களுக்கு அமைவாக தேடுதல் தொடர்கிறது.