தமிழகத்தில் வளர்ச்சி திட்டம் எதுவும் வரக்கூடாது என்பதில் திராவிட முன்னேற்றக் கழத்தின் செயல் தலைவர் ஸ்டாலின் குறியாக இருப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் இன்று ஊடகவியலாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவர், தமிழகத்திற்கு மத்திய அரசு நல்ல உதவிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது என்றும், இந்த நிலையில் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் எதிர்த்தவர்கள் இன்று தலைகுனிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாக் கட்சி பல வளர்ச்சி திட்டங்களை கொடுத்து வருகிறது என்றும், திராவிட முன்னேற்றக் கழகைம்-காங்கிரஸ் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு கொண்டு வந்த ஒரு நல்ல திட்டம் என்ன என்பதை அவர்களால் சொல்ல முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழத்தினர் போராடுகின்றனர் என்றும், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஸ்டாலின் எதிராக இருக்கிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை என போராடினார்கள், ஆனால் கர்நாடக முதல்வர் குமாரசாமி தமிழகத்திற்கு எதிராக நடந்துகொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு குறித்த காலத்தில் ஆணையத்தை அமைத்து அரசிதழில் வெளியிட்டு இருக்கிறது என்றும், அதுவும் கர்நாடக உறுப்பினர்கள் இல்லாமல் ஆணையத்தை அறிவித்திருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிரதமருக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழத்தினர் காட்டிய கருப்பு கொடிகளை, கருப்பு பலூன்களை திரும்பபெற வேண்டும் என்றும், பெங்களூரு நோக்கி நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.