என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என பிசியாக இருக்கும் கவுதம் மேனன், ரஜினியுடன் இணைவதை யாரோ தடுத்துவிட்டனர் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். தனுசை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என பிசியாகி இருக்கும் கவுதம் மேனன் ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியிருக்கிறார்.
அந்த திட்டம் என்ன ஆனது என்பது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் ‘துருவ நட்சத்திரம்’ கதையைத்தான் ரஜினியிடம் கூறினேன். தயாரிப்பாளர் தாணு கூட்டிக்கொண்டு போனார்.
காலையில் கதையைக் கேட்டவுடன், ‘சூப்பராக இருக்கு. யார் எல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள், எத்தனை நாள் தேவைப்படும்’ என்று கேட்டார். ‘படம் பண்ணலாம். நீ யாரிடமும் சொல்லாதே. செய்தி தீயா பத்திக்கும். வீட்டில் மட்டும் சொல்லிடு’ என்று சந்தோஷமாக என்னை அனுப்பி வைத்தார் தாணு.
நானும் என் குழுவினருடன் அமர்ந்து எப்படிப் பண்ணலாம் என்று உடனே திட்டமிட்டுக் கொண்டு இருந்தேன். மாலையில் தாணு சார் போனில் ‘இல்லை… ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். ரஜினிகிட்ட யாரோ ஏதோ சொல்லியிருக்கிறார்கள். இப்போது நடக்காது.
நான் ரஞ்சித்தை வைத்து பண்ணப்போறேன்’ என்று சொன்னார். இதுதான் நடந்தது. யார் என்ன சொன்னாங்க என்று எதுவுமே தெரியாது. நல்லவங்க யாரோ ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் தெரியும்’ என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார். ரஜினியை கவுதம் மேனன் இயக்குவதை தடுத்தது யார்? என்ற கேள்வி தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.