இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காததால், ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா இராணுவத்தின் மற்றொரு அணி புறப்படுவதில் தொடர்ந்தும் இழுபறி நீடிக்கிறது.
முன்னர் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளின் அனுமதியுடன் சிறிலங்கா படையினர் ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட போதிலும், இந்த ஆண்டில் இருந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னரே, சிறிலங்கா படையினரை அனுப்ப வேண்டும் என்று, அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான ஐ.நா பணியகம் அறிவித்திருந்தது.
இதற்கமைய இந்த ஆண்டு மார்ச் மாதம் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இன்னமும் சிறிலங்கா இராணுவத்தினருக்கான அனுமதிகளை வழங்கவில்லை.
இதனால் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 101 படையினரைக் கொண்ட அணியை லெபனானுக்கு அனுப்ப முடியாத நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.