தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்ற போதிலும், அது உயரிய கொள்கை வழியிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் ஏற்புரையை வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறப்பு அதிதியான சம்பந்தன், காலம் தாழ்த்தி எம்முடன் இணைய சம்மதித்திருந்தாலும் அவர் வரவு பெருமையையும் மகிழ்வையும் ஊட்டி உள்ளது எனவும், தன்னை இந்த முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தவர் அவரே எனவும், இதுவரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நடந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் தனக்கில்லை என்ற போதிலும், உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டு வராது இருக்க தன்னால் முடியாது எனவும், அதனால் தனக்கும் கட்சிக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பினும், தனது நிலையைப் புரிந்து, நடவடிக்கைகளில் இருந்து இறங்கி வந்தவர் சம்பந்தன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் சிலர் தன்னை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்காக குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும், தனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் தெரிவித்துள்ள அவர், சம்பந்தனின் வருகையாலோ என்னவோ, கூட்டமைப்பைச் சேர்ந்த பலர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற வந்துள்ளனர் எனவும், அவருக்கும் அவ்வாறான பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக எமது எல்லாக் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள் எனவும், ஒற்றுமையானது கொள்கை ரீதியிலேயே அமைய வேண்டும் என்றும், தம்பி பிரபாகரன் தனது இயக்கத்துக்கு எதிராக நடந்து கொண்ட கட்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஓர் அரசியல் கட்சியை உருவாக்கினார் எனவும், அப்போது கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகள் சில இன்று வெளியிலே நிற்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது கொள்கை முரண்பாடுகள் காரணமாகவோ, தனிப்பட்ட காரணங்களுக்காகவோ இருக்கலாம் எனவும், ஆனால் ஓர் ஏற்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையும் சேர்த்து, கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியில் கூட்டாட்சி – மாகாணத்தில் தன்னாட்சி என்று கூறிவிட்டு, மத்தியின் முகவர்களாக நடந்து கொண்டு வந்திருப்பவர்கள் எமது பயணத்துக்கு இடையூறு விளைவிக்கக் கூடியவர்கள் எனவும், அதேபோல் தேசியக் கட்சிகளின் அங்கத்தவர்கள் மத்தியின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும், அவர்கள் எமது உறவுகளாக இருந்தாலும் எமது பயணத்தில் சேரக்கூடியவர்கள் அல்ல என்பதையும் முதலமைச்சர் விபரித்துள்ளார்.