தனி ஒருவரின் ஆட்சி என்ற ஆபத்தான காலகட்டத்தில் துருக்கி தற்போது நுழைவதாக, ரிசெப் தயிப் எர்துவானை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முஹர்ரம் இன்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது முழுமையாக “”ஒரு நபர் ஆட்சியை”” துருக்கி மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதை வெளிப்படுத்துவதாக ஊடவியலாளரிடம் கூறிய அவர், அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகளைத் தாம் எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு கருத்து வாக்கெடுப்பில் பிரதமர் பதவியை ஒழிப்பதற்கும், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், எர்த்துவானின் இந்த வெற்றியை அடுத்து குறித்த இந்த ஒப்புதல் இப்போது செயல்படத் தொடங்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிசெப் தயிப் எர்துவான் புதிய நிர்வாக அதிகாரங்களை தன் கையிலெடுத்துக்கொள்ள உள்ளததனால், பிரதமர் பதவி ஒழிக்கப்படுவதுடன், நாடாளுமன்றத்தின் அதிகாரமும் பலவீனமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.