வன்னியில் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து கைதுகள் நாள்தோறும் தொடர்கின்ற நிலையில், கிளைமோர் குண்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபரென தெரிவிக்கப்படும் கிளிநொச்சி – சாந்தபுரத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் என்று அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் போராளி, வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து கடந்த 23ஆம் நாள் இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் வைத்து, கிளிநொச்சி – திருவையாறு பகுதியைச் சேர்ந்த 24 வயதான கேதீஸ்வரன் என்பவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டார்.
அவர் சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதியின் அயல்வீட்டுக்காரர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
முன்னதாக முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிராம் நிறைகொண்ட கிளைமோர் ஒன்று, கைக்குண்டு ஒன்று, றிமோட் கொன்ரோல் நான்கு, ரி56 ரவைகள் 98, விடுதலைப் புலிகளின் சீருடை இரண்டு, புலிக்கொடி 40-45 என்பவற்றுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த போது, கடந்த வெள்ளிக்கிழமை இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டது.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே, பிரதான சந்தேகநபரும் மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.