முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத்தடைக்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்கள் இந்த பயணத் தடையை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியிருந்த நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த குறித்த வழக்கில் ஐந்தில் நான்கு நீதிபதிகள் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த பயணத்தடையானது ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமனை சேர்ந்த பெரும்பாலானோர் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கிறது.
நீதிமன்றத்தின் இந்த தலைகீழ் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்தின் வெற்றியாக கருதப்படுகிற போதிலும், இந்த பயணத்தடையானது அகதிகள் மற்றும் மனித உரிமைக் குழுக்களால் பரவலாக விமர்சிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.