இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள அணைகள் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலங்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படும்வரை இந்த சட்டமூலத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று இந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
மத்திய அரசு இயற்ற உத்தேசித்துள்ள 2018ஆம் ஆண்டின் அணை பாதுகாப்பு சட்டமூலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு அரசால் அண்டை மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் தமிழக சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
2016ல் அணை பாதுகாப்பு சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டு அதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இப்போது மீண்டும் அதே சட்டமூலத்திற்கே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.