அமெரிக்கா நடத்தும் மிகப்பெரிய கடற்படை ஒத்திகையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த அணியினர் பேர்ள் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
26 நாடுகளைச் சேர்ந்த 52 போர்க்கப்பல்கள், மற்றும் 25 ஆயிரம் படையினர் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கின்ற நிலையில், முதல்முறையாக இந்தக் கடற்படைப் பயிற்சிக்கு இலங்கை அழைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையில் இருந்து 25 மரைன் கொமாண்டோக்கள் இந்தக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதுடன், இவர்கள் கடந்த மாதம் அவுஸ்திரேலியா சென்று, அங்கிருந்து அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பலில், ஹவாய் நோக்கிப் பயணமாகியுள்ளனர்.
இவர்கள் பயணித்த அவுஸ்திரேலிய போர்க்கப்பல்களின் அணி நேற்று பேர்ள் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதுடன், குறித்த கடற்படைக் கூட்டுப் பயிற்சி இன்று ஹாவாய் தீவுகளுக்கு அப்பால் ஆரம்பமாகவுள்ளது.