மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அவரின் பணியகம் என 6 இடங்களில் காவல்துறையினர் கடந்த மாதம் நடாத்திய சோதனையில், 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பணமும் விலையுயர்ந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை எண்ணுவதற்கும் அவற்றின் மதிப்பைக் கணிப்பதற்கும் 36 நாட்கள் எடுத்ததாகவும், இவ்வாறு பெரும் அளவுக்குப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது மலேசிய வரலாற்றிலேயே முதல் முறை என்றும் அது கூறியுள்ளது.
இன்று நடாத்திய ஊடகவிலாளர் கூட்டத்தில், இந்த விவரங்களை வெளியிட்டுள்ள மலேசிய வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் அமர் சிங், 6 இடங்களிலிருந்து கடந்த மே மாதம் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களின் மதிப்பு 900 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1.1 பில்லியன் ரிங்கிட் வரை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 116 மில்லியன் ரிங்கிட் பணமும், 567 உயர் இரகக் கைப்பைகளும், 440 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜீப் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணமும், நகைகளும் இப்போது மத்திய வங்கியில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.