இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும், அவருடைய ஆட்க்காலத்திலேயே பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
இன்றைய வடமாகாணசபை அமர்வின்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அபகரிப்புக்கள் குறித்து மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கொண்டுவந்த பிரேரணை மீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனா ஒரு மௌனமான ஆக்கிரமிப்பாளராக இருந்து கொண்டிருக்கின்றார் எனவும், 2015ம் ஆண்டுக்கு பின்னான அவருடைய ஆட்சிக்காலத்தில் வடமாகாணத்தில் பெருமளவு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் வரையிலான காணிகளை பேணற் காடுகளாக அறிவித்து ஆக்கிரமித்துள்ளார் எனவும், அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பெருமளவு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன என்றும், இவ்வாறு வடமாகாணத்தின் பல இடங்களில் மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் ஆக்கிரமிப்புக்கள் நடந்திருக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்கள் சனநாயகத்திற்காகவும், ஊழல் அற்ற ஆட்சிக்காகவும், ஊடக சுதந்திரத்திற்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளித்து அவரை சனாதிபதி ஆக்கிய போதிலும், இன்று அவர் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் ஒருவராகவும், ஊழல்வாதிகளுக்கு தஞ்சம் கொடுக்கும் ஒருவராகவும் மாறியிருக்கும் நிலையில், மைத்திரியிடம் நீதியை எதிர்பார்ப்பது எப்படி எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்கா இராணுவம் மக்களுடைய நிலங்களை விடுவிப்பதாக கொழும்பில் கூறப்படுகின்ற போதிலும், விடுவிக்கப்படும் நிலங்கள் மக்களுடைய தனிப்பட்ட நிலங்களே தவிர மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய அரச நிலங்கள் அல்ல எனவும், இராணுவம் இன்றளவும் அரச நிலங்களில் இருந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இராணுவம் மேலதிகமாகவும் அரச நிலங்களை தேடிக் கொண்டிருக்கின்றது எனவும், அண்மையில் தொல்லியல் திணைக்களத்தை சேர்ந்த சிலரை சந்தித்தபோது, இராணுவம் யாழ்ப்பாண கோட் டையை தமக்கு தரும்படி கேட்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தகவல் வெளியிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு சனாதிபதியிடம் காணிகளை இழந்த மக்கள் நீதி கேட்பதால் பயன் ஒன்றும் இருக்கப்போவதில்லை எனவும், எனவே இந்த காணி ஆக்கிர மிப்புக்களை அனைத்துலக சமூகத்திற்கு வழிப்படுத்தவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.