ஏதிலிகளாக வரும் மக்களை தங்க வைப்பதற்காக ரொரன்ரோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக தங்ககங்களில் மிக மோசமான இடப்பற்றாக்குறை நிலவுவதாக ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.
ஏதிலிகள் தங்குமிடங்கள் தற்போது அளவுக்கு அதிகமான மக்களால் நிரம்பி வழிவதாகவும், இது குறித்து மத்திய அரசிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், மேலதிக உதவிகள் இன்றி, ரொரன்ரோவில் தற்போதைக்கு உள்ள அகதி முகாம்களில் புதிதாக வரும் அகதிகளையோ, தஞ்சக் கோரிக்கையாளர்களையோ தங்க வைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவை தங்களது புதிய வீடாக கருதி வருகின்றவர்களை வரவேற்பதில் தானும் ரொரன்ரோ நகர நிர்வாகமும் தயாராகவும் தெளிவாகவும் இருக்கின்ற போதிலும், இடப்பற்றாக்குறை என்பதே தற்போதய பிரச்சினையாக உள்ளது எனவும், மத்திய அரசுக்கு அனுப்பியுளள அந்தக் கடிதத்தில் ஜோன் ரொறி குறிப்பிட்டுள்ளார்.
எனவே இநத் விவகாரம் தொடர்பில் உடனநடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய மாநில அரசாங்கங்கள் உதவ வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏதிலி மக்களை ஏற்று அரவணைத்துக் கொள்வதில் ரொரன்ரோ நகரம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது எனவும், தொடர்ந்தும் ஏதிலிகளை வரவேற்பது தொடர்பில் கனேடிய மத்திய அரசாங்கம் கெர்ணடுள்ள கொள்கைகளை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு வரும் ஏதிலிகளை வரவேற்கும் பொறுப்பானது எல்லைப் பகுதிகளுடன் மட்டும் முடிந்துவிடவில்லை எனவும், அவர்களுக்கான வீடு உள்ளிட்ட பல்வேறு தேவைகளை தம்மால் மாத்திரம் நிறைவேற்ற முடியாது எனவும், அதற்கு மத்திய மாநில அரசுகளின் உதவி நிச்சயம் தேவை எனவும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி மேலும் தெரிவித்துள்ளார்.