இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் இன்று வீழ்ச்சியடைந்து உள்ள நிலையில், அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட கூட்டணி நாடுகள் அனைத்திடமும் ஈரானிடம் இருந்து நவம்பர் மாதத்திற்குப் பின்னர் கச்சா எண்ணெயை வாங்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது.
அத்துடன் குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்றும், இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற காரணங்களால் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின்போது டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்ததுடன், அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே மேலும் சரிந்து 69.10 என்ற நிலையை எட்டிய நிலையில், இது இந்திய ரூபாயில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத சரிவு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.