தேசிய அரசாங்கத்தில் காணப்படும் சில திருத்திக் கொள்ள கூடிய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் குடும்ப ஆட்சியை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில இன்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
1949 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவினையே எதிர்கொண்டு வருகின்றது எனவும், கடந்த அரசாங்கத்தின் முறையற்ற அரசியல் கொள்கையின் காரணமாக பாரிய கடன் சுமைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை தோற்றம் பெற்றதாகவும், இதன் பிரதிபலனையே தற்போது தேசிய அரசாங்கம் அனுபவித்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தேசிய அரசாங்கத்தில் காணப்படும் சில திருத்திக் கொள்ள கூடிய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் குடும்ப ஆட்சியினை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றியிருந்தால், இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களின் ஆதரவு தேசிய அரசாங்கத்திற்கே கிடைக்கப் பெற்றிருக்கும் எனவும், ஆனால் மக்கள் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் விதமாகவே வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தேசிய அரசாங்கத்தில் காணப்படுகின்ற அடிப்படை குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துக் கொண்டு 2020 ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.