வடக்கு– கிழக்கு மாகாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 40ஆயிரம் வீடுகளுக்குரிய ஒப்பந்தத்தை சீனாவின் தொடருந்து நிறுவனத்துக்கு வழங்க வேண்டாம் எனவும், அந்த ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு வழங்குமாறும் இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நேரில் கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கில் வீடுகளை அமைக்கும் பணி சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை குறித்து இந்தியா கவலை வெளியிட்டிருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது சரியே என்று அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே இந்த விடயம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இலங்கை தலைமை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சீனாவுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை இல்லாமல் செய்து, 12 இலட்சம் ரூபா பெறுமதியில் இந்த வீடுகளை அமைத்துத்தர இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்படவேண்டும் எனவும், இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், அவர்கள் ஊடாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டமைப்பின் கோரிக்கையை சாதகமாக ஆராய்வதாக உறுதியளித்த ரணில் விக்கிரமசிங்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அமைச்சரவைக்கு மீண்டும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.