காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை நலத்திட்டங்கள் வழங்கியதை தொடர்ந்து, ஊடகவிலாளரைச் சந்தித்த போதே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரியிலிருந்து ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டுமோ, அந்த அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கம் அமைத்துள்ள காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் யூலை மாதம் 2ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே யூலை 2ஆம் நாள் நடைபெறுவுளள இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதா அல்லது புறக்கணிப்பதா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதா என்பது குறித்து கர்நாடக அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடாத்தியுள்ளது.
அத்துடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.