யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன எனவும், போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டதுடன், போரில்லாத காலத்திலும் எமது இனம் திட்டமிட்டு பாதிக்கச் செய்யப்படுகின்றது என்றும், இதற்கு நாம் தான் முடிவு கட்டவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கல்வி கலாசார பண்பாடுகளுக்கு யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் பெயர்போயிருந்த போதிலும், இன்று நிலமை தலைகீழாக மாறிப்போய் விட்டது எனவும், வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் ஒருபுறமும், போதைப் பொருள் பாவனையின் உச்சம் மறுபுறமும், கொள்ளையர்களின் அட்டூழியங்கள் இன்னொருபுறமும், காமுகர்களின் கொலைவெறித்தனங்கள் மற்றொருபுறமும் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு யாழ்ப்பாணத்தின் நிலமை வந்துள்ளது என்பதுடன், இது திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாரத்துக்குள் மூன்று கொடூரச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இடம்பெற்றுள்ளது எனவும், ஒரு பள்ளிச் சிறுமி பாடசாலைச் சீருடையுடன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்ற நிலையில், ஒரு பெண் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றார் என்பதையும், இன்னொரு குடும்பப் பெண் கொள்ளையர்களினால் மிருகத்தனமான வன்புணர்வு செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கின்றார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கொடூரமான கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு குடாநாட்டில் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், மிருகத்தனமான இந்தச் செயல்களுக்கு முடிவுகட்ட கட்சி பேதமின்றி அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் எனவும் இரா சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.