தமிழ் மக்களின் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், உணவகங்களை நடத்துவதற்கும், காணிகளைத் தம்வசப்படுத்தி வைத்திருப்பதற்கும், குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இராணுவத்தினரின் சேவைகள் தேவைப்படமாட்டாது என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போர் முடிந்ததாக கூறப்பட்டு அடுத்த மே மாதத்துடன் 10 ஆண்டுகள் ஆகப் போகின்ற போதிலும், இன்னமும் போர்க்கால மக்களாகப் பார்த்து, இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது, தமிழ் மக்கள் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘உத்தியோகபூர்வப் பணி’ என்ற சனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போது, இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.
வடபகுதியில் வாழுகின்ற மக்கள் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற மக்களின் தேவைகளை விட அதிக அளவு தேவைகளையுடையவர்கள் என்பதையும். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பல தேவைகளை அவர்கள் கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது மக்களில் பலர் போரின் விளைவாக உயிர் இழப்புக்களையுச் சந்தித்தது ஒருபுறமிருக்க, பொருள் பண்டங்கள், வீடு வளவுகள் என்று அத்தனையையும் தொலைத்துவிட்டு, நடைப்பிணங்களாக போர் வடுக்களை உடல்களிலும் உள்ளங்களிலும் சுமந்தவர்களாக சுற்றித்திரிவது எமக்கு மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மக்களுக்கான இருப்பிட வசதிகள் அவர்களுக்கு ஏற்றவாறு செய்து தரப்பட வேண்டும் எனவும், அவர்கள் வாழ்ந்த நிலங்கள், அவர்கள் தொழில் செய்கின்ற பூமிகள், கடல் வளங்கள், விவசாய நிலங்கள் அவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இராணுவம் அவசியமானது என்பதுடன், தமது சொந்த நாட்டை ஏனைய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பதற்கும், உள்நாட்டில் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் இராணுவத்தின் பணி அவசியமானது என்ற போதிலம், எமது பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், உணவகங்களை நடத்துவதற்கும், காணிகளைத் தம் வசப்படுத்தி வைத்திருப்பதற்கும், குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இராணுவத்தினரின் சேவைகள் தேவைப்படமாட்டாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படிப்படியாக இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் தந்துள்ள போதிலும், அது நடைபெறாமலே இருக்கின்றது எனவும், மாறாக குற்றச் செயல்கள் எமது பகுதிகளில் கூடியுள்ளன என்றும், அவற்றைத் தடுக்க எமக்கு அதிகாரங்கள் தரப்படவில்லை எனவும், காவல்துறையினர் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவம் வெளியேறி காவல்துறை அதிகாரம் எமக்குக் கையளிக்கப்பட்டால் இன்றைய வன்முறைக் கலாச்சாரத்தை வடக்கில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ஒரு பெரிய காரியம் அல்ல எனவும், உள்ளூர் வாசிகளை ஆட்கொண்டு வெளியூர்வாசிகள் தமது காரியங்களைச் சாதித்துக் கொள்ள எமது மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வேலைத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை இராணுவத்திற்கு வழங்கி, அதன் மூலம் எமது வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதென்பது, நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான ஒரு செயற்பாடாகவே அமையும் எனவும், இதனால்தான் வட பகுதியில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தின் செறிவை குறைக்குமாறு தான் பல இடங்களிலும் எடுத்துரைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மனதைத் தம் வசப்படுத்த வேண்டும் என்ற கருத்தில் மக்களுடன் இராணுவத்தினரைச் சேர்ந்து வாழவிடுவது எதிர் காலத்தில் பல சங்கடங்களை ஏற்படுத்தும் எனவும், கொள்கை அடிப்படையில் படையினர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் கபட நோக்கங்கள் கொண்டிருக்கக் கூடாது என்றும், எம்மை வாழ வைப்பதாகக் கூறிக் கொண்டு எம்மை எஞ்ஞான்றும் கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட வேண்டிய மக்களாக கணித்து வாழக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுளளார்.
நாம் வாழ்வது எமது பாரம்பரிய நிலங்களில் என்பதையும், இங்கு இருக்கும் இயற்கை வளங்கள் யாவும் இங்குள்ள மக்களுக்கே சொந்தம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அவற்றை சூறையாடிச் செல்வதையோ தொடர்ந்து ஆக்கிரமிப்பில் வைத்து வருவதையோ எமது மக்கள் தொடர்ந்து ஏற்றுக் கொள்வார்கள் என்றோ, ஏதாவது எச்சில் துண்டுகளை எறிந்தால் அவர்கள் எம்வசம் இருப்பார்கள் என்றோ எண்ணக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.
எமது காணிகள் எமக்கு எந்தளவுக்கு முக்கியமோ எமது சுதந்திரமும் எமக்கு மிக முக்கியம் எனவும், எம்முடன் கலந்தாலோசித்தே எமக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், எம்மைப் பங்குதாரர்களாக ஏற்றே எமக்கான நன்மைகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே எமக்கான அபிவிருத்திகளை எமக்கூடாகச் செய்ய முன் வாருமாறும் இலங்கை மத்திய அரசிடம் வலியுறத்தியுளள முதலமைச்சர் விக்னேஸ்வரன், எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக மக்களுடனும் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து வெளிப்படையாகப் பேச்சுக்களை முன்னெடுக்குமாறும், அவற்றின் அடிப்படையில் எமது பிராந்தியத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கள் சிதைவுறா வகையில், பாரம்பரியங்கள் பழுதுறா வகையில், கலாசார சீரழிவுகள் நடைபெறா வகையில் உயரிய திட்டங்களைத் தீட்டி எம் மக்களுக்கு உதவ முன்வாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.