மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை 25 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் நீதவான் பிராபாகரன் முன்னிலையில், சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் ராஜபக்ஸ தலைமை குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.
இவர்களுடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர் இணைந்து அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த அகழ்வுப் பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு, அகழ்வு மேற்கொண்ட போது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழுமையான மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடை பெற்று வருகின்றன.
அகழ்வுப் பணிகளின் போது கிடைக்கப் பெற்ற சில மனித எச்சங்கள் ஒன்றுடன் ஒன்று சொருகிய நிலையில் காணப்படுவதனாலும், மனித எச்சங்களை அப்புறப்படுத்தமால் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது ஏற்கனவே கிடைத்த மனித எச்சங்கள் சிதைவடைய வாய்ப்புகள் இருப்பதனாலும், இதுவரை கிடைத்த அனைத்து மனித எச்சங்களையும் அப்புறபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அனைத்து மனித எச்சங்களும் சட்ட ரீதியாக அகற்றப்பட்டு, நீதி மன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு, முழு அகழ்வு பணிகளும் நிறைவடைந்த பின்னர் உடற் கூற்று பரிசேதனைகளுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளன.
அத்துடன் குறித்த வளாகத்தை அகலப்படுத்தி அகழ்வு செய்வதற்கான செயற்பாடுகளும் இடம் பெற்று வருவதுடன், அதற்காக குறித்த வளாகத்தின் முகப்பு பகுதிகள் தோண்டப்படுகின்ற நிலையில், முகப்பு பகுதியிலும் முழு மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.