ரொரன்ரோ Kensington Market பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
College Street மற்றும் Augusta Avenue பகுதியில், நேற்று இரவு 10.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், ஆங்கே நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் காணப்பட்தாகவும், அவர்களில் சுமார் 20 வயதான ஆண் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பாரதூரமான நிலையில் காணப்பட்டதாகவும் ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாரதூரமான நிலையில் காணப்பட்டவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும், பலத்த காயங்களுடன் காணப்பட்ட, 20 வயது மதிக்கத்தக்க மேலும் ஒருவரும், ஆபத்தில்லாத காயங்களுடன் காணப்பட்ட மேலும் இரண்டு பேரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதையும் அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து குறைந்தது நான்கு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அவர்களில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அதேவேளை சந்தேக நபர்கள் குறித்த அடையாளங்களும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.