ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஒரு மில்லியன் ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்றுப் பிற்பகலில் கைது செய்யப்பட்ட அவர், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இன்று காலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஆனால் அவர் தம்மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடி தொடர்பான 3 குற்றச்சாட்டுகளையும் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய ஒரு குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.
இதேவேளை தற்போது அவரை பிணையில் விடுவித்துள்ள நீதிமன்றம், அவர் தமது கடப்பிதழை ஒப்படைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நஜிப்பிற்கு எதிரான வழக்கு அடுத்த ஆண்டு 19 நாட்களுக்கு விசாரிக்கப்படும் என்று தற்போதைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி மாதம் 18ஆம் நாளிலிருந்து 28 ஆம் நாள் வரையிலும், மார்ச் மாதம் 11ஆம் நாளிலிருந்து 15ஆம் நாள் வரையிலும் விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டு நிரூபணமானால் 20 ஆண்டுச் சிறைத்தண்டனையும் ஊழல் செய்யப்பட்ட தொகையைப் போல் 5 மடங்கிற்குக் குறையாத அபராதமும் அவருக்கு விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.