முன்னாள் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து, வட மாகாண முதலமைச்சர் மேன்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட டெனீஸ்வரனுக்கு, அவர் வகித்த அமைச்சுப் பதவிகளை உடனடியாக மீள வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு, டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீக்கி இருந்தார்.
இதற்கு எதிராகடெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையிட்டிருந்த நிலையில், அந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், டெனீஸ்வரன் வகித்த அமைச்சுப் பதவிகளை அவரிடம் உடனடியாக மீள ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீடு செய்ய முதலமைச்சர் தீர்மானித்துள்ளதாகவும், அது குறித்து வட மாகாண சபையின் முக்கியஸ்தர்களுடன் அவர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் அமைச்சுப் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வட மாகாண ஆளுநருக்கு நேற்று பிற்பகல் அளவில் கிடைத்துள்ளதாக டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வட மாகாண அமைச்சர்கள் தொடர்பில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இன்றையநாள் நடவடிக்கை மேற்கொள்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அமைச்சுப் பதவியை பங்கிட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், கந்தையா சிவனேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர், தங்களது அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்றும் டெனீஸ்வரன் கூறியுள்ளார்.