விஜயகலாவின் கோபம் மிகவும் நியாயமானது எனவும், யாழ் மாவட்டத்தின் நிலைமையினை வெளிப்படுத்திய அவரை மட்டும் விமர்சிப்பது ஏன் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
உண்மையில் விடுதலைப் பலிகளின் தலைவர் தற்போது நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட சிறந்தவர் என்பதுடன். கொண்ட கொள்கையில் நேர்மையாக இருந்தவர் எனவும். இன்றுள்ள பல சிங்கள அரசியல்வாதிகள், கொண்ட கொள்கைக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்கள் என்றும், பொதுபல சேனை பொது செயலர் ஞானசார தேரர் அண்மையில் பகிரங்கமாக ஊடகங்களின் முன் தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் உடைந்து நொருங்கியுள்ள சட்டம் – ஒழுங்கு நிலைமையை கண்டித்து, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, ஒரு தாயாக, ஒரு சகோதரியாக தன் கோபத்தை வெளிப்படுத்திய விஜயகலா மகேஸ்வரனை மட்டும் பிடித்துக்கொண்டு விமர்சிப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யபட்டுள்ளதால், அதைப்பற்றி விஜயகலா பேசுவது சட்டவிரோதம் என்று கூறலாம் என்ற போதிலும், அன்று ஞானசாரர் என்னிடம் கூறியதும் சட்ட விரோதம் இல்லையா எனவும் அவர் சீற்றம் வெளியிட்டுள்ளார்.
உண்மையில் விஜயகலா தன் கருத்தை சொல்வதற்கு சரியான சொற்களை பயன்படுத்த தவறி இருக்கலாம் என்ற போதிலும், விஜயகலாவின் கோபம் மிகவும் நியாயமானது எனவும், உண்மையில் யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு உடைந்து நொறுங்கி போயுள்ளதுடன், சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்கு மனித மிருகங்களால் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மிருகங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க காவல்துறை துறை தவறி விட்டது எனவும், யாழ் மாவட்ட அரசியல் தலைவர்களும், தெருவில் இறங்கி தம் எதிர்ப்பை வெளிபடுத்தி ஒரு மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி இருக்க வேண்டும் என்றும், காவல்துறை செய்யட்டும் என்று பார்த்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அவர் கூறியுளளார்.
இவ்வாறான நிலையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கருத்தை விட்டுவிட்டு, யாழ் மாவட்ட சட்டம், ஒழுங்கு சீரழிவே இன்று தேசிய பேசுபொருளாக மாறி இருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதுடன், சிறுமிகள் முதல் வயதான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனவும், போதைப்பொருள் கலாச்சாரம் தலை விரித்து ஆடுகிறது என்றும், திரைப்படப் பாணி வாள்வீச்சு நடக்கிறது எனவும், சட்டம் ஒழுங்கை கட்டிக்காக்க வேண்டிய காவல்துறை தூங்குகிறது என்றும் தெரிவித்துள்ள மனோகணேசன், இதையிட்டு பேசும்போது ஆத்திரத்தில் விஜயகலா மகேஸ்வரன் புலிகளை பற்றி பேசிவிட்டார் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.