இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தில் அரசியலமைப்போ அல்லது தற்போதைய சட்டமோ மீறப்பட்டிருக்குமாயின் அது குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று விஜயகலா மகேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், குறித்த கருத்து தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, இந்தத் தீரமானத்தை மேற்கொண்டதாக சபாநாயகர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் தமக்கு அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் தாம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரிப்பதாக அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதேவேளை விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறி, நாட்டின் அரசியல் அமைப்பை மீறியுள்ளதால், அவருக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் நீடிக்க உரிமையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஒழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்களானால், அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன், விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களை மையப்படுத்தி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக இலங்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையில், கட்சித் தலைவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி, இது தொடர்பில் மிகக் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் சபை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், தொடர்ச்சியாக சபையில் அமைதியின்மை நிலவியதனால், சபாநாயகரால் சபை சிறிது நேரத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
சிறிது நேரத்தின் பின்னர் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, விஜயகலா மகேஸ்வரன் விவகாரம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல சபைக்கு அறிவித்தபோதிலும், சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடர்ந்தும் இடமளிக்கப்படாமல் குழப்பம் ஏற்படுத்தப்பட்டமையினால், சபை நடவடிக்கைகளை சபாநாயகர் நாளை வரையில் ஒத்திவைத்துள்ளார்.