இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பவேண்டும் எனவும், விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் இவர்களே கருத்து கூறி வருகின்றனர் என்றும் இலங்கையின் பிரதி அமைச்சரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால் வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் ஊடக மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவிப்பிரமாணத்திற்கு ஏற்காத வகையில் கருத்து கூறியுள்ளார் எனவும், இது தொடர்பில் அரச தலைவரும், தலைமை அமைச்சரும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் இடம்பெற்று வரும் போதைப் பாவனை மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டுமெனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் மீள உருவாக வேண்டுமென்று கருத்து தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரை மறுவாழ்வு பெறுவதற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது ஹிட்லரின் ஆட்சி வேண்டுமென்று பௌத்த மதகுரு கூறுகின்றார் எனவும், அதேபோன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆட்சி வேண்டுமென்றும் கோரப்படுவதாகவும், இவை தவறான செயற்பாடுகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக்கூட்டத்தில் தான் இருந்திருந்தால் இராஜாங்க அமைச்சரின் பேச்சை இடைமறித்து இவ்வாறு பேசுவது தவறு என்று கூறியிருப்பேன் எனவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.