தமிழகத்தின் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் அந்த ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
மோசமான பாதிப்புக்களை எதிர்கொள்வதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அந்த சுற்றுவட்டாரப் பகுதிக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடாத்தினர்.
இந்த போராட்டம் அதிக முனைப்புப் பெற்ற வேளையில் அதனைக் கலைப்பதற்கு தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட மோசமான துப்பாக்கிச் சூட்டில் 13பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலம் காயமடைந்தனர்.
இதனை அடுத்து தொடர்ந்தும் மக்களாலும், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களாலும் வெளியிடப்பட்டு வந்த எதிர்ப்புக்கள் மற்றம் அழுத்தங்கள் காரணமாக குறித்த ஆலை மூடி முத்திரையிடப்பட்டுள்ளதுடன், அதனை தொடர்ந்து மூடுவதற்கும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த மனு மீதான விசாரணைகள் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.