ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும், இரண்டு நாடுகளினதும் பல்வேறு உறவுகளுக்கு இது அடிப்படையானதொன்று என்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் தெரிவித்துள்ளார்.
விடைபெற்றுச் செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று சந்தித்துள்ளார்.
இதன்போதே அவர் குறித்த விடயங்களைக் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக அரங்கில் இலங்கை பெற்றுள்ள நன்மதிப்பினை அலட்சியமாக எடுத்துவிடக்கூடாது எனவும், நிலையான சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு நாட்டின் குறிக்கோள்கள் சாதகமானவையாக காணப்படவேண்டும் என்றும், புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படுகின்ற போது இலங்கை அரசாங்கமானது வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் பாரிய நன்மைகளை அடையமுடியும் எனவும், இந்த நிலையில் இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டினை கொண்டிருக்கும் என்று இந்த சந்திப்பின்பேர்து அதுல் கேசாப் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அனைத்துலக சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இதன்போது பதிலளித்துள்ளார்.
இலங்கை மக்களின் நலனை அடிப்படையாகக்கொண்ட அனைத்துலகத்தின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசாங்கம் முழுமையானமாக நிறைவேற்றாமல் இருக்கின்றது எனவும், இந்த நிலையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டதாக கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினரும் வழங்கிய அனைத்து பங்களிப்பிற்கும் இரா சம்பந்தன் நன்றி தெரிவித்துள்ளார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.